இசையமைப்பாளராக கோலிவுட்டில் நுழைந்த ஜி.வி. பிரகாஷ் பின்னர் நடிகராக அறிமுகம் ஆனார். பாலாவின் நாச்சியார் படம் இவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது.
இந்த படத்திற்கு பின்னர் தான் நடிக்கும் படங்களை பார்த்து மிகவும் கவனமாக தேர்வு செய்து நடிக்கிறார். அந்த வகையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு வெளியான சர்வம் தாள மயம் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அருமையான விமர்சனங்களையும், சிறந்த வசூலையும் ஈட்டியது.
இந்நிலையில் மற்றொரு பெருமையாக 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கான ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் சர்வம் தாள மயம் படம் தேர்வாகி உள்ளது. இந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கி இருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசைஅமைத்து இருந்தார்.
இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் வெகு உற்சாகம் அடைந்துள்ளனர். 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ஜூன் 15 முதல் ஜூன் 24ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் தேவரகொண்டா, துல்கார் சல்மான் நடித்த 'நடிகையர் திலகம்' திரைப்படமும் திரையிடப்படுகிறது. இருப்பினும் நேரடி தமிழ் படமாக ஜி.வி. பிரகாசின் சர்வம் தாள மயம் படம் உள்ளது.